இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனிகா கொவிட் தடுப்பூசி நாளை முதல் இலங்கை மக்களின் பாவனைக்காக கொண்டுவரப்பட உள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், கொவிட் தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பிரதானியுமான லலித் வீரதுங்க தெரிவித்தார்.
இலங்கைக்கு கொண்டு வரப்படும் கொவிட் தடுப்பூசி முதல் கட்டமாக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கும், கொவிட்க்கு எதிராக போராடி வரும் சுகாதார பணியாளர்களுக்கும் ஏற்றப்படவுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கொவிட் தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு வழங்கும் பணிகள் தொடர்பாக விளக்கம் அளிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், தடுப்பூசி ஏற்றும் முதல் கட்ட நடவடிக்கையில் சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்படவுள்ளது.
இதில் முதல் கட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ள ஊழியர்களும் உள்வாங்கப்படவுள்ளனர். இரண்டாம் கட்டத்தின் கீழ் தொற்றை தடுக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள இராணும், பொலிஸாருக்கு வழங்கப்படவுள்ளது.
இதில் சுமார் 1 இலட்சத்து 20 ஆயிரம் பேர் வரை தடுப்பூசியை பெற்றுக்கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.