கொவிட் 19இனால் மரணிப்போரை எரிப்பதா அல்லது புதைப்பதா என்பது மருத்துவ தரப்பினரின் பரிந்துரைப்படியே தீர்மானிக்கப்படும் எனவும் இந்நிலைப்பாட்டில் ஜனாதிபதியினதும் அமைச்சரவையினதும் மாற்றம் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
ஐ.நா.வெளியிட்ட அறிக்கையில் இலங்கை குறித்து மட்டுமன்றி சீனா குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் ஐ.நா குழுவிற்கு மருத்துவ துறைசார் அறிவு கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கோவிட்டினால் இறப்பவர்களை புதைப்பதற்கும் அனுமதி வழங்க வேண்டும் என ஐ.நா குழுவொன்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது.இது தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் நேற்று வினவப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர்
சீனாவிலுள்ள முஸ்லிம்கள் நூறு வீதம் வாழும் பிராந்தியத்தில் இலங்கையை விட அதிக மக்கள் வாழ்கின்றனர். இங்கும் இறப்பவர்கள் எரிக்கப்படுகின்றனர்.இனவாத பிரச்சினை எழும் என்று கூறப்படும் கருத்தை நிராகரிக்கிறோம்.மருத்துவத் துறையின் ஆலோசனையை பெற்றே அரசாங்கம் முடிவுகளை எடுக்கிறது. அவர்களின் ஆலோசனை படியே எரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு மாற்றமாக தன்னிச்சையாக நாம் முடிவு எடுத்தால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு எமக்கு பொறுப்பு கூற நேரிடும்.அதனால் தன்னிச்சையாக முடிவு எடுக்க எம்மால்முடியாது.
புதைப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என ஐ.நா கூறினாலும் மருத்துவ தொடர்பான அதன் அறிவு தொடர்பில் சந்தேகம் உள்ளது.
இரு முறைகளையும் பின்பற்றலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளதோடு எமது நாட்டுக்கு தனித்துவமான முடிவை எடுக்கலாம் எனவும் அறிவித்துள்ளது. அதற்கமையவே எரிக்க மாத்திரம்முடிவு செய்யப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
கொரோனாவினால் இறப்பவர்களின் சடலங்களை எரிப்பதை நிறுத்துமாறும் இது மனித உரிமை மீறல் எனவும் ஐ.நா நிபுணர் குழு நேற்று முன்தினம் வழங்கியுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பிலே நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கேள்வி எழுப்பப்பட்டது. (நன்றி தினகரன்)