முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா
( ஐ. ஏ. காதிர் கான் )
இலங்கையில் கொவிட் – 19 காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா, அவர்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் தகனம் செய்யப்பட்டு வருகின்றது. இது விடயத்தில் உயர் நீதிமன்றம் ஊடாக உரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் ஓர் அங்கமாகவே, பிறந்து 20 நாட்களேயான சிசுவின் ஜனாஸா தகனம் செய்யப்பட்ட விடயத்தை நீதிமன்றம் வரை கொண்டு சென்றுள்ளேன் என, முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
குறித்த சிசுவின் ஜனாஸா தகனம் செய்யபட்ட விவகாரம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, ராஜகிரியவிலுள்ள அவரது அலுவலகத்தில் (28) வியாழக்கிழமை நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது,
தமிழ் மக்களின் அரசியல் பிரதி நிதிகள், தங்களது சமூகத்தின் பிரச்சினைகளை பாராளுமன்றம் வரை கொண்டு செல்கின்றனர். அதேநேரம், அவர்களது பிரதேச அபிவிருத்திகள் தொடர்பிலும் கரிசனை காட்டி வருகின்றனர். இதற்கு முதன்மைக்காரணம், அவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும், சமூகம் சார்ந்த விடயங்களில் கலந்தாலோசித்து ஒற்றுமையாகச் செயற்பட்டு வருவதேயாகும்.
ஆனால், முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் பல்வேறு கட்சிகளாகப் பிரிந்து நின்று, தங்களது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காகச் செயற்பட்டு வருகின்றனர். அண்மையில் அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட 20 அரசியல் அமைப்பு வாக்கெடுப்பின்போது, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிரதான முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்களின் உறுப்பினர்கள் தன்னிச்சையாகச் செயற்பட்டு அரசாங்கத்திற்கு வாக்களித்துள்ளனர்.
இந்நிலையில், முஸ்லிம் அரசியல் தலைமைகளும், அவர்களது உறுப்பினர்களும் ஒன்றிணைந்து, ஒரு திடமான ஜனாஸா வியத்தை முன்வைத்தாவது அரசாங்கத்திற்கு வாக்களித்திருக்க முடியும். அப்படி நடந்திருந்தால், முஸ்லிம்களுக்கு ஒரு சிறந்த முடிவு நடைபெற்றிருக்கலாம். ஆனால், அவர்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னிச்சையாகச் சென்று அவர்களது தனிப்பட்ட பிரச்சினைகளைப் பேசிவிட்டு வாக்களித்திருக்கின்றனர்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசாங்கத் தரப்பில் இருந்தாலோ அல்லது எதிர்த்தரப்பில் இருந்தாலோ முஸ்லிம்களின் உரிமைகள் என்று வரும்போது, ஒன்றிணைந்து குரல் கொடுக்க முன் வரவேண்டும். அவ்வாறில்லாமல், தனிப்பட்ட முறையில் எந்த முயற்சியைச் செய்தாலும் பயனற்றதாகவே இருக்கும்.
உலக சுகாதார வழிகாட்டுதலின் பரிந்துரைகளுக்கமைய, விஞ்ஞான முறைமைகளுக்கு ஏற்றவாறு, கொவிட் தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கமும் செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது. உலக நாடுகளில் உள்ள 190 நாடுகள் கூட இதனை முற்று முழுதாக ஏற்றுக்கொண்டுள்ளன. இந்நிலையில், கொவிட் – 19 காரணமாக முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலாத்காரமாக தொடர்ந்தும் எரிக்கப்பட்டு வருகின்றது. இது முஸ்லிம்களுக்கு செய்யக்கூடிய பாரிய மனித உரிமை மீறலாகும்.
நாம் அனைவரும் இலங்கையர்கள். எனவேதான், இங்கிருந்துகொண்டே எமது உரிமைகளுக்காக ஜனநாயக ரீதியில் குரல் கொடுத்து வருகின்றோம்.
ஜனாஸா தகனம் செய்யப்படும் விவகாரத்தில், முஸ்லிம்கள் மிகவும் இக்கட்டான நிலைமைக்குள் தள்ளப்பட்டு, மிகுந்த மன உழைச்சலுக்கும் உள்ளாகியுள்ளனர்.
எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும், நாம் எமது மத உரிமைகளை மாத்திரம் எவ்விதத்திலும் விட்டுக்கொடுக்க முடியாது. இதுவிடயத்தில், நாம் அரசியல், கட்சி, பேதங்களை மறந்து ஒற்றுமையுடன் செயற்பட முன்வர வேண்டும். என்னுடைய உண்மையான நிலைப்பாடும் இதுவேயாகும். இதற்கான நல்லதொரு அருமையான சந்தர்ப்பமும் எமக்கு தற்போது கிடைத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை, எமக்காக முஸ்லிம்களின் உரிமைகளுக்காகப் பயன்படுத்துவோம் என்றார்.