கொவிட் தாக்கம் பரவலடைவதன் காரணமாக கொழும்பில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்வோரை அன்டிஜன் பரிசோதனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில் மேல் மாகாணத்திலிருந்து நாளை 28ஆம் திகதி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வாகனங்கள் மூலம் வெளிச்செல்லும் அனைவரும் அன்டிஜன் பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதற்காக விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும் என்றும் 11 இடங்களில் மேற்படி பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை மேல் மாகாணத்தில் பொதுப் போக்குவரத்து மற்றும் பாடசாலை பஸ் நடத்துனர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆயிரம் பேருக்கு இதுவரை அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதனூடாக மூவர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி செயற்பட்ட நபர்கள் 24 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் மேற்படி சட்டங்களை மீறி செயற்பட்ட88 நிறுவனங்கள் கடந்த 24 மணித்தியாலங்களில் இனங்காணப் பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.